சோனியா, ராகுல் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு, இது வரை சோனியா, ராகுலுக்கும் அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அவர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, சி.ஆர்.பி.எப். போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பிரச்னையை மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கிளப்பினார். இது பற்றி அவையில் விவாதிக்க வேண்டுமென்று கோரினார். ஆனால், கேள்வி நேரத்தில் இது பற்றி விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் கூறினார். சபாநாயகரும், காங்கிரஸ் கோரிக்கையை ஏற்கவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பழிவாங்கும் அரசியலை நிறுத்து, சர்வாதிகாரத்தை கைவிடு, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.
இறுதியில், மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.