மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்.. பட்நாவிஸ் மீண்டும் முதல்வரானார்.. அதிகாலையில் அவசரமாக பதவியேற்பு

Devendra Fadnavis takes oath as Maharashtra Chief Minister again

by எஸ். எம். கணபதி, Nov 23, 2019, 10:58 AM IST

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. இன்று(நவ.23) அதிகாலையில் பாஜக தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சியமையவில்லை. கூட்டணியும் முறிந்தது. பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சியமைக்க முன்வரவில்லை. கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி) 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதனால், அந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் இந்துத்துவா கொள்கையுடடைய சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதா என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தயக்கம் காட்டி வந்தார். அதன்பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 2 முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், காங்கிரஸ் செயற்குழு கூடி விவாதித்தது.

இதன்பின், டெல்லியில் சரத்பவார் வீட்டில் என்.சி.பி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். இதற்கு பிறகு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், மூன்று கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச செயல்திட்டம் அமைத்து ஆட்சியமைப்பதில் பிரச்னை இருக்காது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து மும்பை திரும்பிய சரத்பவாரை அவரது சில்வர் ஓக் இல்லத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார். அப்போது உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரேவும், சஞ்சய் ராவத் எம்.பி.யும் உடனிருந்தனர். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன்பிறகு உத்தவ் புறப்பட்டு செல்லும் போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது அவர் பதிலளிக்காமல் சென்றார்.

அதே சமயம், உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி விரைவில் அமையும் என்ற சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். உத்தவ்தாக்கரே முதல்வராவார் என்று சரத்பவாரும் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனால், நள்ளிரவுக்குள் எல்லாமே மாறி விட்டது. இன்று அதிகாலை 8 மணிக்கு திடீரென முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

ராஜ்பவனில் அவசர, அவசரமாக நடந்த பதவியேற்பு விழாவில், அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சரத்பவாரின் என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் குழு தலைவராக அஜித்பவார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனால், அவர் ஆதரவு கடிதம் கொடுத்ததும், கவர்னர் கோஷ்யாரி, பாஜகவை ஆட்சியமைக்க அழைத்து விட்டார். பவார் கட்சியில் 54 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜக 105 பேர் உள்ளனர். மேலும், சிறிய கட்சகள் மற்றும் சுயேச்சைகள் 20 பேரும் ஆதரவு தருகின்றனர்.

இந்நிலையில், சரத்பவார் இன்று அதிகாலையில் உத்தவ் தாக்கரேவிடம் ேபானில் பேசியிருக்கிறார். தான் சொன்ன வாக்குறுதியை மீறவில்லை என்றும், தனது உறவினரான அஜித்பவார் திடீரென இப்படி துரோகம் செய்து விட்டார் என்றும் கூறியுள்ளார். இதை சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்வர் பட்நாவிஸ், துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோருக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You'r reading மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்.. பட்நாவிஸ் மீண்டும் முதல்வரானார்.. அதிகாலையில் அவசரமாக பதவியேற்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை