பாஜக அரசுக்கு ஆதரவு.. என்.சி.பி கட்சி முடிவல்ல.. சரத்பவார் விளக்கம்..

Ajit Pawars decision to side with BJP his own, not that of Ncp

by எஸ். எம். கணபதி, Nov 23, 2019, 11:14 AM IST

பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் கொடுத்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சியமையவில்லை. கூட்டணியும் முறிந்தது. கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி) 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதனால், அந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் உத்தவ் தாக்கரே தான் முதல்வர் என்று சரத்பவாரும் தெரிவித்தார். சிவசேனாவும் தெரிவித்தது. காங்கிரசாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இன்று முடிவாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நள்ளிரவுக்குள் எல்லாமே மாறி விட்டது. இன்று அதிகாலை 8 மணிக்கு திடீரென முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவியேற்றனர். ராஜ்பவனில் அவசர, அவசரமாக நடந்த பதவியேற்பு விழாவில், அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சரத்பவாரின் என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் குழு தலைவராக அஜித்பவார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனால், அவர் ஆதரவு கடிதம் கொடுத்ததும், கவர்னர் கோஷ்யாரி, பாஜகவை ஆட்சியமைக்க அழைத்து விட்டார். பவார் கட்சியில் 54 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜக 105 பேர் உள்ளனர். மேலும், சிறிய கட்சகள் மற்றும் சுயேச்சைகள் 20 பேரும் ஆதரவு தருகின்றனர்.

இந்நிலையில், சரத்பவார் இன்று அதிகாலையில் உத்தவ் தாக்கரேவிடம் போனில் பேசியிருக்கிறார். தான் சொன்ன வாக்குறுதியை மீறவில்லை என்றும், அஜித்பவார் திடீரென இப்படி துரோகம் செய்து விட்டார் என்றும் கூறியுள்ளார். இதை சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், சரத்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக அஜித்பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு. அது தேசியவாத காங்கிரசின் முடிவல்ல. இதை நாங்கள் அந்த முடிவை ஆதரிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

இன்று மாலைக்குள் சரத்பவாரும், உத்தவ் தாக்கரேவும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You'r reading பாஜக அரசுக்கு ஆதரவு.. என்.சி.பி கட்சி முடிவல்ல.. சரத்பவார் விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை