சூரியனுடைய வெளிப்புறத்தை ஆய்வு செய்யும் வகையில் பி.எஸ்.எல்.வுி ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ) தனது 50வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ரிசாட்-2பி ஆா்1 உள்பட 10 செயற்கைக்கோள்களை நேற்று(டிச.11) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதை தொடர்ந்து, விஞ்ஞானிகளிடையே இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசினார். . அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. அதில் 17 டன் செயற்கைக்கோள்கள் வர்த்தக ரீதியில் செலுத்தப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 50 வது ராக்கெட் அனுப்பி, பொன்விழா கொண்டாடுகிறாம். இது இஸ்ரோ வரலாற்றில் புதிய மைல்கல். அதே போல், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75வது ராக்கெட் என்ற பெருமையையும் பி.எஸ்.எல்.வி- சி48 ராக்கெட் பெறுகிறது. கடந்த 26 ஆண்டுகளாக பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 1.1 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் அளவுக்கு அதன் செயல்திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஏவப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டின் மொத்த எடையில் 56 சதவீதம், வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களாகும். இஸ்ரோ தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை செலுத்தும். விரைவில் சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா- எல் 1 என்ற விண்கலம் ஏவப்பட உள்ளது. இதுவும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. வரும் 5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.