தெலங்கானா என்கவுன்டர் செய்த போலீசாரை நீங்கள் நிரபராதிகள் என்று சொல்லும் போது, மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்

Supreme Court chief justice observes, that there must be an independent inquiry into the Telangana encounter.

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 12:24 PM IST

தெலங்கானா என்கவுன்டரில் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளது.

ஐதராபாத் புறநகரில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் ஒருவர், வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், திரையுலகினர் என்று பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுப்பினர்.

இந்நிலையில், பலாத்காரம் மற்றும் எரிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் கடந்த 6ம் தேதி அதிகாலையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ேபாலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.

இந்த என்கவுன்டருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், என்கவுன்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 2014ம் ஆண்டில் வகுத்துள்ள விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியிருந்தனர். இதே போல், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தெலங்கானா என்கவுன்டர் குறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இம்மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று(டிச.11) விசாரித்தது. தெலங்கானா என்கவுன்டர் தொடர்பாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுவோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தாங்கள் நியமிக்கும் முன்னாள் நீதிபதி விசாரணை கமிஷன் டெல்லியில் இருந்தே விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து, விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தெலங்கானா போலீசார் சார்பில் சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி, இதற்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில்தான் விசாரணை நடந்துள்ளது. எனவே, என்கவுன்டர் குறித்து நேரடியாக நீதிபதிகள் விசாரணை நடத்த முடியாது. குற்றப்புலனாய்வு பணியை நீதிபதிகள் நேரடியாக மேற்கொள்ள முடியாதுஎன்று வாதாடினார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி பாப்டே, நீங்கள் அந்த போலீசார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொண்டால் நாங்கள் தலையிடுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், என்கவுன்டர் செய்த போலீசாரை நீங்கள் நிரபராதிகள் என்று சொல்லும் போது, மக்களுக்கு உண்மை தெரிய வேண்டியது அவசியம். எனவே, அதற்கு உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர். விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

You'r reading தெலங்கானா என்கவுன்டர் செய்த போலீசாரை நீங்கள் நிரபராதிகள் என்று சொல்லும் போது, மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் - சுப்ரீம் கோர்ட் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை