குடியுரிமை மசோதா: மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் வகையில் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் லீக் மனுதாக்கல்

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 12:28 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.

இந்நிலையில், கேரளாவில் செல்வாக்கு படைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்) கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் வகையில் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதசார்பின்மை அடிப்படைக்கு எதிரானது. மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14ல் அளிக்கப்பட்ட அனைத்து மதத்தினரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். எனவே, இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


More India News

அதிகம் படித்தவை