இலங்கையில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை? என்று சரத்பவார் கேட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014க்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
இந்துக்கள், பார்சி, சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமண மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் இந்த சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டம் மத அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களிடம் பாரபட்சம் காட்டுவதாக கூறி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையொட்டி, நாடு முழுவதும் பல மாநிலங்களில் மாணவர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க இந்த திருத்தச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இலங்கையில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.