குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்கோட்டில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது. இதில், மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அன்புள்ள மாணவர்களே, இளைஞர்களே! நீங்கள் இந்தியர்கள் என்று கருதிக் கொண்டால் மட்டும் போதாது. இது போன்ற சிக்கலான காலங்களில் எல்லாம் நீங்கள் இந்தியர்கள் என்பதையும், வெறுப்புணர்வுகளால் இந்தியா அழிவதை அனுமதிக்கவே மாட்டோம் என்பதையும் வெளிக்காட்ட வேண்டும். எனவே, ராஜ்கோட்டில் மாலை 3 மணிக்கு நடைபெறும் வன்முறை, வெறுப்புணர்வுக்கு எதிரான போராட்டத்தில் என்னுடன் பங்கேற்க வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா என்பது பல கனவுகளால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த தேசத்தை, பிரித்தாளும் அரசியலில் இருந்து நாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பகுதியாக என்னுடன் ராஜ்கோட்டில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.