குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருப்பப் பெறும் வரைக்கும் ஓயப்போவது இல்லை.. ஸ்டாலின் அறிக்கை

by எஸ். எம். கணபதி, Dec 23, 2019, 14:31 PM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால், மக்களின் குடியுரிமையை பறித்து, அவர்களுக்கு குழிபறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும் அதற்கு, தலையில் பாதங்களைத் தாங்கி அனுதினமும் அடிமைச் சேவகம் செய்யும் மாநில அதிமுக அரசையும், கண்டித்து இன்று சென்னையில் நடத்தப்பட்ட பேரணி, போர் அணியாகவே நடந்திருக்கிறது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று எழுச்சியுடன் கூடி, மத்திய பாஜக அரசுக்கும்- மாநில அதிமுக அரசுக்கும் நாம் அனைவரும் எச்சரிக்கை செய்திருக்கிறோம். இந்த மாபெரும் எழுச்சியின் வாயிலாக மத்திய அரசுக்கு நாம் விடுக்கின்ற எச்சரிக்கை என்னவென்றால், குழிபறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறுங்கள்' என்பதுதான்.

வரலாறு என்றும் மறக்க முடியாத இந்த மாபெரும் எழுச்சியின் வாயிலாக, மாநில அதிமுக அரசுக்கு நாம் சொல்கின்ற எச்சரிக்கை என்னவென்றால், தமிழ்க் குலத்தைக் கூறு போடும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுகவே தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக்கேளுங்கள்' என்பதுதான்!

எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் தொடங்கியது இந்தப் போரணி. தாளமுத்து என்ற பெயரும், நடராசன் என்ற பெயரும் இரண்டு தனிமனிதர்களின் பெயர்கள் அல்ல. நம் தாய்மொழியாம் தமிழுக்கு 1938ம் ஆண்டு தங்களது உயிரையே ஈந்த மாபெரும் போராளிகளின் பெயர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் முதல்வர் கலைஞர் சென்னையில் மாபெரும் அரசு மாளிகையை அமைத்து, அந்தத் தமிழ்த் தியாகிகள் இருவரது பெயரையும் சூட்டினார்கள். அந்தத் தமிழ்த்தியாகிகள் பெயரால் அமைந்துள்ள மாளிகையில் இருந்து நமது போரணி தொடங்கியது. ஏனென்றால் அந்த உணர்வை நாம் பெற்றாக வேண்டும் என்பதற்காகத்தான்.

இது தன்மான, சமத்துவ, சகோதரத்துவ, ஜனநாயகப் பேரணியாக நடந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவைக் காக்கும் அரணாக, இந்தியாவே உற்று நோக்கும் வகையில் இந்தப் பேரணி அமைந்திருந்தது. பேரணியில் கலந்து கொண்டு உணர்வை வெளிப்படுத்திய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக உரிமைகளுக்காக - நீதியை நிலைநாட்டுவதற்காக நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக, மனிதர்களின் அடிப்படை உரிமையாம் பேரணி நடத்தும் உரிமையைக் கூட வழங்குவதற்கு தமிழக அரசு தயங்கியது; “எங்கே தம் பதவி பறிபோய் விடுமோ” என்று பயந்தது; தடுத்தது. அவர்கள் அனுமதி தரவில்லை. அனுமதி தராததுதான் இப்பேரணிக்கு மிகப்பெரிய விளம்பரமாகவே மாறிவிட்டது. செலவு இல்லாத விளம்பரத்தை அதிமுக அரசே ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

போராட்டத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிமன்றம், போராடும் ஜனநாயக உரிமையை மதித்து அனுமதி வழங்கியது. இது இந்த எடப்பாடி அரசாங்கத்துக்கு மிகப் பெரிய அவமானம். இது போன்ற அவமானங்கள் அவர்களுக்கு புதிதல்ல. ஆனால் பேரணிக்கு வருபவர்களை மிரட்டும் வகையில் பல்லாயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தினார்கள். என்னைப் பொறுத்தவரையில் பத்தாயிரம் போலீஸார், குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டதாகவே நான் கருதுகிறேன். அவர்களுக்கும் நன்றி!

அதைப்போலத்தான் இன்று நாம் தொடங்கி இருக்கும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டமானது இந்த சட்டத்தை திருப்பப் பெறும் வரைக்கும் ஓயப்போவது இல்லை! ஏதோ ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்தோம்,பேரணி நடத்தினோம், கண்டனக்கூட்டம் நடத்தினோம் என்பதோடு முடியப் போவதில்லை. இது இந்த நாட்டின்,
ஜனநாயகத்தைக் காக்கின்ற போர், சமத்துவத்தைக் காக்கின்ற போர், மதச் சார்பின்மையைக் காக்கின்ற போர், தமிழர்களைக் காக்கின்ற போர், தீரம் மிக்க இந்த போர் தொடரும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்பப் பெறும் வரை தொடரும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருப்பப் பெறும் வரைக்கும் ஓயப்போவது இல்லை.. ஸ்டாலின் அறிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை