தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.. ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

by எஸ். எம். கணபதி, Dec 25, 2019, 08:54 AM IST

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியில் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது. இதில் சிறுபான்மை முஸ்லிம்களை ஒதுக்கி விட்டதாக கூறி, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்தைத் தொடர்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம்(என்.ஆர்.சி) கொண்டு வந்து, வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களை மட்டும் வெளியேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்த பீகார், ஒடிசா, மகாராஷ்டிர முதல்வர்களே தங்கள் மாநிலத்தில் என்.ஆர்.சி.யை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்.பி.ஆர்) புதுப்பிக்கும் பணிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
அசாம் தவிர நாடு முழுவதும் மக்கள் தொகை(சென்சஸ்) மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு(என்.பி.ஆர்) பணி, 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். 2-வது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நடத்தப்படும்.

என்.பி.ஆர் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.3,941.35 கோடியும், சென்சஸ் எடுக்கும் பணிக்கு ரூ.8,754.23 கோடியும் ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதை செய்தாக வேண்டும். இந்த கணக்கெடுப்பின் போது, மக்கள் எந்த ஆதாரத்தையும் அளிக்க வேண்டியதில்லை. என்.பி.ஆர். தயாரிக்கப்பட்ட பிறகு என்.ஆர்.சி கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

You'r reading தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.. ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை