தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் குறித்து இது வரை அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது. இதில் சிறுபான்மை முஸ்லிம்களை ஒதுக்கி விட்டதாக கூறி, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்தைத் தொடர்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம்(என்.ஆர்.சி) கொண்டு வந்து, வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களை மட்டும் வெளியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இதனால், முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்த பீகார், ஒடிசா, மகாராஷ்டிர முதல்வர்களே தங்கள் மாநிலத்தில் என்.ஆர்.சி.யை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டனர். இதற்கிடையே, டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாங்கள் கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை என்.ஆர்.சி பற்றி எங்குமே விவாதிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்தான், அசாமில் என்.ஆர்.சியை அமல்படுத்த உத்தரவிட்டது என்று கூறினார்.
ஆனால், பிரதமர் மோடி பொய் சொல்லுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்தது நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான சட்டம் (என்.ஆர்.சி) நிச்சயம் கொண்டு வரப்படுமென கூறியிருக்கிறார் என்று எதிர்க்கட்சிதரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் பேசியது சரிதான். நாங்கள் இதுவரை என்.ஆர்.சி பற்றி மத்திய அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவே இல்லை. என்.பி.ஆர். புதுப்பித்தலுக்கும் என்.ஆர்.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்போதைக்கு என்.ஆர்.சி பற்றி விவாதிக்கப்படாது என்றார்