தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணி முதல்வர்களே அறிவித்துள்ள நிலையில், அதிமுகவும் எதிர்க்க வேண்டுமென்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா கூறியிருக்கிறார்.
மத்திய பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது. இதன்படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014க்கு முன்பாக இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத பிறமதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படவுள்ளது. இது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மையை மீறியது என்றும் கூறி, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சட்டத்தைத் தொடர்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம்(என்.ஆர்.சி) கொண்டு வந்து, வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களை மட்டும் வெளியேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால், முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, என்.ஆர்.சி சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, புதுச்சேரி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிர முதல்வர் சிவசேனா ஆகியோரும் தங்கள் மாநிலத்தில் என்.ஆர்.சி.யை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜா அளித்த பேட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்ததில் தவறு இல்லை. அதே சமயம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை ஏற்க முடியாது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசியிருக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததற்கே அதிமுகவுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, என்.ஆர்.சி குறித்து இப்போது வெளிப்படையாக அதிமுக எதுவும் கூற முடியாது என்று கூறியிருக்கிறார்.