தமிழகத்தில் வரும் 27ம் தேதியன்று முதல்கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இது வரை நடத்தப்படவில்லை. தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்தின் பல்வேறு காரணங்கள், வழக்குகளுக்கு பிறகு தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிலும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது.
இதன்படி, 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
வரும் 27ம் தேதியன்று, 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி, 16ம் தேதி முடிந்தது. 19ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்கு போட்டியின்றி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல்களில்தான் அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதற்கு பிறகு, வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.