உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் வாங்க வேண்டும்.. பிரதமர் மோடி வலியுறுத்தல்

by எஸ். எம். கணபதி, Dec 30, 2019, 09:21 AM IST

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022ம் ஆண்டு வரை உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது என மக்கள் உறுதி ஏற்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று வானொலியில் பேசி வருகிறார். மனதின் குரல் என்றழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் கடைசி உரையை நேற்று(டிச.29) நேற்று ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இன்றைய தலைமுறையினர் மிகவும் புத்திசாலிகள் என்பதை நாம் அனைவரும் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம். அவர்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்கள். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

அவர்களின் எண்ணங்களில் முக்கியமானது, அவர்கள் அமைப்பு முறைகளை விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து. அதேசமயம், அந்த அமைப்பு முறைகள் சரியாக இயங்காவிட்டால் ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள். அராஜகங்களையும், ஒழுங்கீனமான செயல்பாடுகளையும், ஸ்திரமற்ற தன்மைகளையும் அவர்கள் வெறுக்கிறார்கள். சாதீயங்களையும், குடும்ப ஆதிக்கங்களையும் அவர்கள் விரும்புவதில்லை. இளைஞர்கள் விவேகானந்தரின் வழியில் நாட்டுக்கு தொண்டு புரிய வேண்டும்.

மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் என்று நான் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டேன். இப்போதும் அதை வலியுறுத்துகிறேன். மகாத்மா காந்தி 100 ஆண்டுகளுக்கு முன்பு இதை வலியுறுத்தினார். நமது 75வது சுதந்திர தின விழாவை வரும் 2022ம் ஆண்டு கொண்டாடுகிறோம். அது வரையாவது உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்குவது என்று மக்கள் உறுதி ஏற்க வேண்டும். இளைஞர்கள் சிறிய அமைப்புகளை ஏற்படுத்தி இதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமரின் இந்த பேச்சில் சில சாரம்சங்களை எடுத்து பலர் சமூக ஊடகங்களில் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். குறிப்பாக, சூரியகிரகணத்தன்று பிரதமர் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி உள்நாட்டு தயாரிப்பா? என்று கிண்டலாக கேட்டுள்ளனர். அந்த கருப்பு கண்ணாடி ஜெர்மனியின் மேபெக் கம்பெனியின் தயாரிப்பு என்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் என்றும் மீம்ஸ்களில் கூறப்பட்டிருக்கிறது.

You'r reading உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் வாங்க வேண்டும்.. பிரதமர் மோடி வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை