காமராஜர் சிலை அவமதிப்பு.. காங்கிரஸ் கடும் கண்டனம்..

by எஸ். எம். கணபதி, Dec 29, 2019, 18:34 PM IST

ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலையை அவமரியாதை செய்த சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் காமராஜர் வெண்கல சிலைக்கு நேற்றிரவு(டிச.28) சமூக விரோதிகள் செருப்புமாலை அணிவித்து அவமதித்திருக்கிறார்கள். இத்தகைய படுபாதக செயலை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் சிலையை அவமதித்து இழிவுபடுத்திய சமூக விரோதிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம் அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் வன்னியராஜ் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை காவல்துறையினர் எவரையும் கைது செய்யாதது கடுமையான கண்டனத்திற்குரியது.

எனவே, காமராஜர் சிலையை அவமதித்து இழிவுபடுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a reply