மக்களை பழிவாங்கும் முதல்வர்.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

by எஸ். எம். கணபதி, Dec 31, 2019, 08:38 AM IST

உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தும் மக்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் பழிவாங்குகிறார் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரங்களிலும், துப்பாக்கிச்சூட்டிலும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அதே போல், உ.பி. போலீசார் ஏராளமானோரை கைது செய்துள்ளனர். கைதானவர்களின் வீடுகளுக்கும் பிரியங்கா காந்தி சென்றார். அவரை போலீசார் பல முறை தடுத்தும் அவர் தொடர்ந்து போய் வருகிறார்.
இந்நிலையில், லக்னோவில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை பாஜக அரசு பழிவாங்குகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாக நாங்கள் பழிவாங்குவோம் என்று கூறுகிறார். இப்படி ஒரு முதலமைச்சரே பேசுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.
நான் பிஜ்னோரில் ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன். அவர்களது 21 வயது மகன் சுலேமான், விடுமுறையில் வந்திருக்கிறார்.

அந்த மகன், தொழுகைக்கு சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் அவன் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி விட்டதாக தகவல் வந்திருக்கிறது. அவர்கள் போலீசார் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இதே போல், இன்னொருவர் காபி இயந்திரத் தொழிலாளி. அவரது மகன் பால் வாங்கச் சென்றிருக்கிறான். அப்போதே அந்த தொழிலாளி, அவனை கலவரங்கள் நடப்பதாக எச்சரித்திருக்கிறார். ஐந்து நிமிடத்தில் திரும்பி விடுவதாக சொன்ன அவனும் சுட்டு கொல்லப்பட்டு விட்டான்.

ஆனால், அந்த தொழிலாளி குடும்பத்தினரை போலீசார் மிரட்டி புகார் கொடுக்க விடாமல் செய்திருக்கிறார்கள்.

மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். யாரையும் விசாரிக்காமலேயே கைது செய்திருக்கிறார்கள். இந்த நாட்டின் ஆன்மாவாக உள்ள இந்த மாநிலத்தில் வன்முறைக்கு இடமில்லை. கிருஷ்ணரும், ராமரும் கருணையை போதித்தார்கள். அதை யோகி ஆதித்யநாத் கடைபிடிக்க வேண்டும். ஆனால், அவர் பேச்சை கேட்டு போலீசாரும் பழிவாங்குகிறார்கள்.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.

You'r reading மக்களை பழிவாங்கும் முதல்வர்.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை