நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு இது வரை தனித்தனி தளபதிகள் இருந்து வந்தனர். முப்படைத் தளபதியாக குடியரசு தலைவர் இருந்தார். தற்போது முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக முப்படைத் தளபதியாக ஒருவரை நியமிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.
இந்நிலையில், ராணுவத் தளபதி பிபின்ராவத் இன்று(டிச.31) ஓய்வு பெறுகிறார். அவரை முதலாவது முப்படைத் தளபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் மூன்று படைகளுக்குமான ஆலோசகராக பணியாற்றுவார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ராணுவ ஆலோசனைகளை வழங்குவார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கார்கில் போர் நடந்த பிறகு ராணுவ நிலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி இது போன்று முப்படைத் தளபதி ஒருவரை கொண்டு வர பரிந்துரை செய்திருந்தது. ஆனாலும், அடுத்து வந்த ஆட்சிகளில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு இதில் உறுதியான முடிவு எடுத்து முப்படைத் தளபதியை நியமித்துள்ளது.
பிபின் ராவத் முப்படைத் தளபதியாக நாளை பொறுப்பேற்பார். தற்போதைய ராணுவ துணைத்தளபதி மனோஜ் முகுந்த் நாராவனே, புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்பார்.