ஊரக உள்ளாட்சி தேர்தல்.. ஜன.2ல் வாக்கு எண்ணிக்கை

by எஸ். எம். கணபதி, Dec 31, 2019, 08:50 AM IST

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜன.2) நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதன் பின்பு, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல் பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45,336 பதவிகளுக்கு கடந்த 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாயின.
இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என்று மொத்தம் 46,639 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், 77.73 சதவீத வாக்குகள் பதிவாயின.

முதல் கட்ட தேர்தலின் போது, முறைகேடுகள் நடந்த புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளில் நேற்று மறுவாக்குப்பதிவும் நடந்தது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள்(ஜன.2) நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கவுன்சிலர் தேர்தல் நடைபெறும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

You'r reading ஊரக உள்ளாட்சி தேர்தல்.. ஜன.2ல் வாக்கு எண்ணிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை