உத்தவ் தாக்கரே அரசில் 4 முஸ்லிம் அமைச்சர்கள்.. பெரும் தலைகளுக்கு வாய்ப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 31, 2019, 13:02 PM IST

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசில் 36 அமைச்சர்கள் நேற்று(டிச.30) பதவியேற்றனர். அவர்களில் 4 பேர் முஸ்லிம்கள். மேலும், அசோக் சவான் உள்பட முக்கிய தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆனால், சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டதால் பிரச்னை ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது. அதன்பிறகு ஏற்பட்ட ஒரு மாத கால அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்து, தற்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

இதன்பின், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கூட்டணி கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே நீண்ட விவாதம் நடத்தி வந்தார். இதையடு்த்து, நேற்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் 36 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். சரத்பவாரின் அண்ணன் மகனும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார் துணை முதல்வரானார். அவர்தான் பட்நாவிசுடன் சென்று விட்டு மனம் திருந்தி வந்தவர்.

அமைச்சர்களில் 9 பேர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். மேலும், கிராந்திகாரி சேத்காரி பக்சாவை சேர்ந்த சங்கர்ராவ் கடக், பிரகார் ஜன்சக்தியை சேர்ந்த பச்சு கதம், சுயேச்சை எம்.எல்.ஏ.வான ராஜ்தீர பாட்டீல் ஆகியோரும் அமைச்சர்களானார்கள். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 14 பேரும், காங்கிரசை சேர்ந்த 10 பேரும் அமைச்சராக பதவி ஏற்றனர்.
சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரேவும் அமைச்சராக பதவியேற்றார்.

மேலும், முன்னாள் துணை முதல்வர் சஜ்ஜன் புஜ்பால், ஜெயந்த் பாட்டீல், திலிப் வல்சே பாட்டீல், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் போன்ற பெரும் தலைகளும் அமைச்சர்களாகி உள்ளனர்.

அதேபோல், தேசியவாத காங்கிரசில் நவாப் மாலிக், ஹசன் முஷாரிப், காங்கிரசில் அஸ்லாம் ஷேக், சிவசேனாவில் அப்துல் சத்தார் ஆகிய 4 முஸ்லிம்களுக்கும் அமைச்சர் பதவி தரப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிர அரசியலே இப்போது யாரும் எதிர்பாராத அளவுக்கு வினோதமாக மாறி விட்டது. பவார் குடும்பத்தினரும், பால் தாக்கரே குடும்பத்தினரும் நீண்ட காலமாக எதிரெதிர் திசையில் கோலோச்சி வந்தனர். தற்போது இரு குடும்பத்தினரும் இணைந்து

ஆட்சியமைத்திருப்பது வித்தியாசமானது.
அடுத்ததாக, பால் தாக்கரே உயிருடன் இருந்த வரை தாக்கரே குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. பால் தாக்கரே ரிமோட் கண்ட்ரோலில்தான் சிவசேனா கூட்டணி ஆட்சியை நடத்தினார். ஆனால், இப்போது பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே முதல்வராகி உள்ளார். உத்தவ் மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராகி இருக்கிறார்.
ஒரே சமயத்தில் 2 தாக்கரேக்கள் பதவியேற்றிருக்கிறார்கள். இருவருக்குமே நிர்வாக அனுபவம் எதுவும் கிடையாது.

அதேசமயம், அசோக் சவான், சஜ்ஜன் புஜ்பால், ஜெயந்த் பாட்டீல் என்ற நீண்ட அனுபவம் பெற்ற தலைவர்கள் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். அதே போல், சிவசேனா அரசில் 4 முஸ்லிம்கள் அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading உத்தவ் தாக்கரே அரசில் 4 முஸ்லிம் அமைச்சர்கள்.. பெரும் தலைகளுக்கு வாய்ப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை