குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்

by எஸ். எம். கணபதி, Dec 31, 2019, 13:06 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் இதை கொண்டு வந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், வங்கசேதம் நாடுகளில் இருந்து வந்து 2014க்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை தரப்படும்.

இது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று கூறி, ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு போட்டியாக பாஜகவினர், அந்த சட்டத்திற்கு ஆதரவு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று(டிச.31) ஒரு தீர்மானத்தை ெகாண்டு வந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடுவதாலும், அந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாலும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த தீர்மானத்தை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரித்தது. அக்கட்சியின் தலைவர் வி.டி.சசிதரன் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இவை சமூகத்தில் அமைதியை குலைக்கும். இப்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 13, 14, 15 ஆகியவற்றுக்கு முரணானது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் திவாகரன் பேசுகையில், இந்த சட்டத்தால் மக்கள் கொதித்து போயுள்ளனர். நாடு இதுவரை காணாத அளவுக்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானம் உலகிற்கு ஒரு முக்கியச் செய்தியை எடுத்து கூறும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

பாஜக உறுப்பினர் ஓ.ராஜகோபால், இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து பேசினார்.

You'r reading குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை