மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று(டிச.31) டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.
மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆனால், சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டதால் பிரச்னை ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது.
அதன்பிறகு ஏற்பட்ட ஒரு மாத கால அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்து, தற்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே நேற்று(டிச.30) தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். சிவசேனா கட்சியை சேர்ந்த 9 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 14 பேர், காங்கிரசை சேர்ந்த 10 பேர் மற்றும் 3 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் அசோக் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் உள்ளிட்டோர் அமைச்சர்களாகி உள்ளனர். அமைச்சர்கள் 10 பேரும், மாநில காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் இன்று(டிச.31) காலையில் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.
அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் அங்கு வந்து கலந்துரையாடலில் பங்கேற்றார். மகாராஷ்டிர அரசியலில் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்று அவர்கள் விவாதித்தனர்.