பிரதமருக்கு எதிராக சர்ச்சைப் பேச்சு.. நெல்லை கண்ணன் மீது வழக்கு

by எஸ். எம். கணபதி, Dec 31, 2019, 13:17 PM IST

பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, நெல்லை கண்ணன் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.

இதையடுத்து, இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசினார் என கூறி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயாசங்கர், மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதரிடம் புகார் கொடுத்தார். அதே போல், பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கொல்லத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து, திருநெல்வேலி மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது இபிகோ 504, 505(2), 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Leave a reply