பிரதமர் மோடி வீட்டு காம்பவுண்டுக்குள் திடீர் தீ விபத்து..

by எஸ். எம். கணபதி, Dec 31, 2019, 08:26 AM IST

பிரதமர் நரேந்திர மோடி வீட்டு காம்பவுண்டுக்குள் பாதுகாப்பு படையினரின் வரவேற்பறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லியில் லோக் கல்யாண் மார்க் சாலையில் 9ம் நம்பர் பங்களா, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்த காம்பவுண்டுக்குள் சிறப்பு காவல் படை(எஸ்பிஜி) அலுவலகம் உள்ளது. இங்கு நேற்றிரவு 7.30 மணிக்கு திடீரென தீப்பற்றியது.

மின்சார இணைப்பில் பழுது ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டது. சிறிய அளவிலான தீ விபத்து என்றாலும் உடனடியாக 9 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. சிறிது நேரத்தில் தீயணைக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதமரின் இல்லத்தில் தீ விபத்து என்று செய்தி பரவியது. இந்நிலையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், லோக் கல்யாண் மார்க் 9ம் நம்பர் காம்பவுண்டுக்குள் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அது பிரதமரின் இல்லத்திலோ, அலுவலகத்திலோ இல்லை. எஸ்பிஜி வரவேற்பறை பகுதியில்தான் நடந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.


Leave a reply