மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டது. இதில், 40 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு லோக்மான்ய திலக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று(ஜன.16) அதிகாலை 7 மணியளவில் தடம்புரண்டது. ஒடிசா மாநிலம் சலாகான் அருகே சரக்கு ரயில் கார்டு கோச் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. உடனடியாக, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கியது.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் வரை காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த வழியாக செல்ல வேண்டிய 7 ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.