ஆசிட் வீச்சில் பாதிப்புக்குள்ளான பெண்ணின் கதையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடித்துள்ள இந்தி படம் 'சப்பக்'. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா கலந்துகொண்டதால் சப்பக் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஒரு கூட்டம் தீபிகாவுக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டில் டிரெண்டிங் செய்தது. அதேசமயம் தீபிகாவுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் உருவாக்கி சப்பக் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மற்றொரு தரப்பு டிரெண்டிங் செய்தது. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. ஆசிட் வாங்குபவர்கள் தங்களது ஐடியை கொடுத்துவிட்டுத் தான் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் எந்தகட்டுப்பாடும் இல்லாமல் ஆசிட் விற்கப்படுவதை ரகசிய கேமரா மூலம் அம்பலப்படுத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் தீபிகா.
மாறுவேடம் அணிந்துசெல்லும் இளைஞர்கள் சிலர் கடைகளுக்கு சென்று ஆசிட் கேட்கிறார்கள். அவர்களுக்கு எளிதாக ஆசிட் கிடைக்கிறது. இதுபோல் 24 பாட்டில் ஆசிட்டை வாங்கினார்கள். ஒரு கடைக்காரர் மட்டும், 'ஆசிட் வாங்க வந்தவரிடம் 'எதற்காக ஆசிட் வாங்குகிறாய்? பெண்ணின் மீது வீசவா? உன் ஐடி கார்டு எங்கே என கேட்கிறார். ஐடி கார்டு தர மறுத்தவருக்கு கடைக்காரரும் ஆசிட் தர மறுத்துவிடுகிறார்.
சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படும் ஆசிட் விற்பனையை தடுக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என குறிப்பிட் டிருக்கிறார் தீபிகா.