ரூபாய் நோட்டில் லட்சுமி.. சுப்பிரமணிய சாமிக்கு முஸ்லிம் லீக் கண்டனம்

by எஸ். எம். கணபதி, Jan 18, 2020, 14:58 PM IST

ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை பிரசுரிக்க வேண்டுமென்று சுப்பிரமணிய சாமி பேசியிருப்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
மத்திய பிரதேசத்தில் சுவாமி விவேகானந்தா வியாக்யான்மாலா என்ற பெயரில் நடைபெற்ற விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசுகையில், இந்தோனேஷிய நாட்டு கரன்சியில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர். இதேபோல், இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படத்தை அச்சிட வேண்டும். அதன்மூலம், இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இந்த முயற்சிக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும், இதைப் பற்றி யாரும் மோசமாக நினைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரமும், உற்பத்தியும் பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் ரூபாய் நோட்டின் மதிப்பும் வெகுவாக குறைந்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து இந்தியா போன்ற மதசார்பற்ற, ஜனநாயக நாட்டில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயலாகும்.

ஏற்கனவே சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடி வரும் நிலையில், மீண்டும் மக்களிடையே மதபிரிவினை ஏற்படுத்தும் முயற்சியில் சுப்பிரமணிய சுவாமி போன்ற தலைவர்கள் மூலம் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருவள்ளூர் தினத்தில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தனது ட்விட்டரில் காவி உடையுடன் கூடிய திருவள்ளூர் படத்தை வெளியிட்டார். ஏற்கனவே பாஜகவின் இணையதளத்தை திருவள்ளுவரை காவி உடையுடன் பதிவிட்டிருந்தற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து நீக்கப்பட்டது.

ஆகவே மக்களிடையை பிளவு ஏற்படுத்தும் செயலை செய்வதை தலைவர்கள் நிறுத்தி கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.


More India News