பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வாகிறார்..ஜன.20ல் தலைவர் தேர்தல்

J.P.Nadda set to be elected BJP chief unopposed on Jan 20

by எஸ். எம். கணபதி, Jan 18, 2020, 11:59 AM IST

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 20ம் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

கடந்த 2014ம் ஆண்டில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று, பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்பு, பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத்தில் தனது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் தனது தீவிர விசுவாசியாகவும் இருந்த அமித்ஷாவை பா.ஜ.க. தலைவராக கொண்டு வந்த பின்பு, அந்த கட்சி முழுவதும் மோடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி 2வது முறை பொறுப்பேற்றதும் தனது அமைச்சரவையில் 2வது இடத்தை அமித்ஷாவுக்கு வழங்கினார். அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக ஆட்சியிலும் கோலோச்சத் தொடங்கினார்.

இந்நிலையில், பா.ஜ.க. கட்சி விதிகளின்படி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவரது பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் முடிவடையவிருந்ததால், அது வரை அவர் தொடரலாம் என அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே, பா.ஜ.க.வில் புதிதாக செயல்தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருக்கிறார்.
தற்போது, பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால், ஜே.பி.நட்டாவை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்ய மாட்டார்கள் என்றும், அவரே அடுத்த தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஜே.பி.நட்டா, அந்த மாநில சட்டசபைக்கு 1993, 1998 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், ராஜ்யசபாவுக்கு தேர்வானார். கடந்த முறை மோடி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது அமைச்சர் பதவியில் இல்லாத அவருக்கு கட்சியின் தேசிய தலைவர் பதவி கிடைத்துள்ளது. அவர் அமித்ஷா மற்றும் மோடிக்கு நெருக்கமானவர் என்பதுடன் அவர்களுக்கு வளைந்து கொடுத்து செல்லக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வாகிறார்..ஜன.20ல் தலைவர் தேர்தல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை