பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2014ம் ஆண்டில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று, பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்பு, பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத்தில் தனது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் தனது தீவிர விசுவாசியாகவும் இருந்த அமித்ஷாவை பா.ஜ.க. தலைவராக கொண்டு வந்த பின்பு, அந்த கட்சி முழுவதும் மோடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி 2வது முறை பொறுப்பேற்றதும் தனது அமைச்சரவையில் 2வது இடத்தை அமித்ஷாவுக்கு வழங்கினார். அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக ஆட்சியிலும் கோலோச்சத் தொடங்கினார்.
இந்நிலையில், பா.ஜ.க. கட்சி விதிகளின்படி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவரது பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் முடிவடையவிருந்ததால், அது வரை அவர் தொடரலாம் என அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே, பா.ஜ.க.வில் புதிதாக செயல்தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று(ஜன.20) நடைபெற்றது. ஜே.பி.நட்டா மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்தனர். நட்டாவை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால், ஜே.பி.நட்டா பா.ஜ.க.வின் 14-வது தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், முதலமைச்சர்கள் யோகி ஆதித்யநாத், விஜய் ரூபானி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
59 வயதான நட்டாவின் இயற்பெயர் ஜெகத் பிரகாஷ் நட்டா. இவர் இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். தனது கல்லூரி பருவத்திலேயே பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் இணைந்து பணியாற்றியவர். இவரது தலைமையின் கீழ் முதலில் டெல்லி சட்டசபை தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இதில் ஆம் ஆத்மியை வீழ்த்தி, பாஜக ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.