நான் மன்னிப்பு கேட்பதா? கொதிக்கும் ரஜினி.. இல்லாததை சொல்லலே

Rajini stands on his speech on Periyar.

by எஸ். எம். கணபதி, Jan 21, 2020, 11:42 AM IST

துக்ளக் விழாவில் நான் பேசியது கற்பனையான ஒன்று அல்ல. அதனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா ஜனவரி 14ம் தேதி மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழா மலரை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த், முதல் மலரை பெற்றுக் கொண்டார். விழாவில் ரஜினி பேசுகையில், ஒருவர் கையில் முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லி விடலாம். அதே போல், துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லி விடலாம். துக்ளக் பத்திகை வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா? அல்லது துக்ளக் படித்ததால் அறிவாளியானாரா? என்று தெரியாது என்று குறிப்பிட்டார்.


இதே போல் அவர், கடந்த 1971ம் ஆண்டில் நிர்வாண கோலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டி சிலைகளை செருப்பு மாலை அணிவித்து பெரியார் ஊர்வலம் நடத்தினார். இதை துக்ளக் பத்திரிகை அட்டையில் வெளியிட்டது. அந்த பத்திரிகையை கலைஞர் தடை செய்தார். ஆனால், அதை மீண்டும் அச்சடித்து சோ விற்பனை செய்தார். அது பிளாக்கில் விற்பனையானது என்று சொன்னார்.

முரசொலியைப் பற்றி மட்டமாக குறிப்பிட்டது திமுகவினருக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் ரஜினியை திமுகவினர் சரமாரியாக வசைபாடினர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், தனது ட்விட்டர் பக்கத்தில், காலைப் பிடித்து, காரியக்காரர்.. என்றெல்லாம் ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதே சமயம், பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் நிர்வாண கோலத்தில் ராமர், சீடை கொண்டு வரப்படவில்லை என்றும், ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்படவில்லை என்றும் தி.க., பெரியார் தி.க. போன்ற இயக்கங்கள் மறுப்பு தெரிவித்தன. பெரியார் தி.க. கட்சியினர், பெரியார் குறித்து ரஜினி பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரி, முற்றுகை ேபாராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், ரஜினி இன்று காலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
துக்ளக் 50வது ஆண்டு விழாவில், 1971ம் ஆண்டு நடந்த பெரியார் ஊர்வலத்தைப் பற்றி நான் பேசியது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. அப்படி நடக்கவே இல்லை என்று சொல்கிறார்கள். இது 2017ம் ஆண்டு வந்த அவுட்லுக் பத்திரிகை(புத்தகத்தை காட்டி), இது இந்து குரூப் வெளியிடும் பத்திரிகை. இதில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் செருப்பு மாலை போட்டு உடையணியாத ராமர் படம் கொண்டு வரப்பட்டதை போட்டிருக்கிறார்கள். நான் எதுவும் கற்பனையாக சொல்லவில்லை. இல்லாத ஒன்றை பற்றி சொல்லவில்லை. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்கிறார்கள். சாரி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.இவ்வாறு ரஜினி கூறினார்.

அதற்கு பத்திரிகையாளர்கள், அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் ஆதாரத்துடன், ராமருக்கு செருப்பு மாலை போடவில்லை என்று சொல்கிறார்களே? என்று கேட்டதற்கு ரஜினி, நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவங்க பார்த்ததை அவங்க சொல்கிறார்கள். சில சம்பவங்களை திருப்பி சொல்லக் கூடாது. இது மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என்று பதிலளித்தார்.

You'r reading நான் மன்னிப்பு கேட்பதா? கொதிக்கும் ரஜினி.. இல்லாததை சொல்லலே Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை