குரூப்4 தேர்வு முறைகேடு..போலீஸ் விசாரணை நடக்குமா ?

by எஸ். எம். கணபதி, Jan 21, 2020, 11:47 AM IST

குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், குரூப்-4 தேர்வு மீண்டும் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது.

கிராம நிா்வாக அலுவலா் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) நடத்திய இந்தத் தோ்வின் முடிவுகள் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டன.

இந்த முடிவுகளை தேர்வு எழுதியவர்கள் ஆய்வு செய்த போது, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடித்து தேர்வாணையம் மீது குற்றம்சாட்டினர். குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் (1606), கீழக்கரை (1608) ஆகிய மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர்தான் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் வந்துள்ளனர். அதிலும், முதல் 5 பேர் இந்த மையங்களில் எழுதியவர்கள் என்று தெரிய வந்தது. மேலும், இடஒதுக்கீடு பிரிவுகளில் முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுதியுள்ளனர்.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய 40 பேரையும் அழைத்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு மாதிரி தேர்வு வைத்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஏன் 100 கி.மீ. தூரத்தில் உள்ள மையங்களுக்கு சென்று தேர்வு எழுதினார்கள் என்பதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகள் ஏற்கனவே வெளியிட்ட குரூப்-4 தரவரிசைப் பட்டியலை ரத்து செய்து விட்டு, புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு செய்தனர். அப்படியானால், அந்த 40 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, அவர்கள் மீது குற்றநடவடிக்கை மேற்கொள்வது கட்டாயமாகிறது.

இந்த சூழலில், இந்த முறைகேடு குறித்து போலீசில் புகார் செய்து விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று தேர்வாணையம் பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையே, 2017-18 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு எழுதியவர்களிலும் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் இருந்து எழுதியவர்கள்தான் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குரூப் 2 தேர்விலும் சுமார் 50 பேர் இப்படி தரவரிசையில் முன்னிலை இடங்களை பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.


More India News