ஸ்ரீபெரும்புதூரில் வின்டெக் மின்சார கார் தொழிற்சாலை..அமைச்சரவை ஒப்புதல்

by எஸ். எம். கணபதி, Jan 21, 2020, 11:34 AM IST
Share Tweet Whatsapp

ஸ்ரீபெரும்புதூரில் வின்டெக் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை, தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இதில், தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் அல்கெராபி என்ற நிறுவனத்தின் சார்பில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதேபோல், சீனாவைச் சேர்ந்த வின்டெக் என்ற நிறுவனம், ன்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இதற்கான ஒப்புதலையும் அமைச் சரவை வழங்கியது.

மின்சார வாகனங்கள் வருங்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைவது நல்ல பலனளிக்கும். ஏற்கனவே சென்னையில் பரீட்சார்த்தமாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மின்சார பஸ் ஒன்று மயிலாப்பூரில் இருந்து சென்ட்ரல் வரை இயக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் எப்ஏஎம்இ திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 525 மின்சார பஸ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply