இறலி போஸ்ட்டர் வெளியிட்ட இயக்குனர் சேரன்.. இயற்கை பற்றி எச்சரிக்கும் படம்..

by Chandru, Jan 20, 2020, 15:56 PM IST

இயற்கையை அதுபோன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் 'இறலி'. கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது .படத்தை இயக்குபவர் ஜெய். விஜயகுமார். இவர் இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாரிடம் சினிமா கற்றவர். ஒளிப்பதிவாளர் பிரதீஷ், இசை -எம்.ஒ.பி.ராஜா, எடிட்டர் ஹாசிம் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா நடித்திருக்கிறார். நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். இவர் 'குயின்' படத்தில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லாலின் 'லூசிஃபர் 'என்ற படத்தில் மஞ்சுவாரியார் மகளாக நடித்தவர்.குயின் படத்திற்காக சைமா விருது, ஆசியா விஷன் விருது ,நானா விருது, வனிதா விருது போன்ற ஏராளமான விருதுகளைக் குவித்தவர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது ,
"இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் . மீறினால் செயற்கை வழிக்கு இழுத்தால்,அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் படமாக 'இறலி' இருக்கும். 'இறலி' என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது . விளைவு என்பதே அதன் பொருள். ஒரு பொருளின் மீது ஆசைப் பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை" என்கிறார் .

படத்தின் நாயகன் வெண்ணிஸ் கண்ணா பேசும்போது. "இறலி 'படத்தின் கதையை கேட்ட நான் இதைத் தயாரிப்பதற்கும் நாயகனாக நடிப்பதற்கும் ஒப்புக் கொண்டேன். இந்தச் சவாலான கதையில் புதுமுகம் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்ற போது நானே அதை ஏற்று நடிக்கச் சம்மதித்தேன். படத்தில் நான் ஒரு விவசாயி மகனாக நடிக்கிறேன். ரசாயன உரங்களைப் போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி கட்ட முடியாமல் போனதால் என் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு விவசாயியின் தற்கொலைக்குப் பிறகு அந்த குடும்பம் என்னாகும் என்று சொல்கிற படமாகவும் இது இருக்கும். அமுதவாணன், சுரேந்தர் என் நண்பர்களாக வருகிறார்கள்.தந்தையை இழந்த என் குடும்பத்தைக் காப்பாற்ற என் தந்தையின் நண்பர் தலைவாசல் விஜய் எங்களை வளர்க்கிறார் .தானே கனிந்து போகிற பழத்தை கனிய விடாமல் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் அந்தப்பழத்தில் ரசாயனத்தின் சாரம் ஏறி விஷத்தன்மை ஆகிவிடுகிறது .இறுதியில் அந்த பழமே விஷமாகி விடுகிறது .பழமே விஷமானால் ? அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட பழங்களை உண்பதால் நம்நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் .உயிரை விடுகிறார்கள் . இந்தக் கொடுமையை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாக 'இறலி' இருக்கும். இயற்கை வழியை மாற்ற நினைக்க வேண்டாம் . செயற்கையாக எதையும் நாம் செய்யக்கூடாது என்பதை இந்த படம் சொல்கிறது.படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமத்து மண் சார்ந்த கதையாகவும் கலகலப்பு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கதையாகவும் இப்படம் இருக்கும். படத்தில் 4 பாடல்கள் அருமையாக வந்துள்ளன. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்கிறார்.

இயக்குநர் சேரன்' இறலி'டைட்டில் போஸ்டரை வெளியிட்டு உலகிற்கு அறிமுகம் செய்தார்.


Leave a reply