குடியுரிமை சட்டம் குறித்து பாஜகவுடன் விவாதிக்கத் தயார்.. அமித்ஷாவுக்கு அகிலேஷ் சவால்

by எஸ். எம். கணபதி, Jan 23, 2020, 11:45 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ்யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதும் ஆங்காங்கே போராட்டங்கள், பேரணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், பாஜக பொது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், யார் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். இந்த சட்டத்தில் சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிக்கும் எந்த ஒரு பிரிவையாவது எதிர்க்கட்சிகளால் காட்ட முடியுமா? இந்த சட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாரா? என்று கேட்டார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் ஜானேஸ்வர் மிஸ்ரா நினைவு நாள் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் பாஜகவினர் தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவை குறித்து விவாதிக்கத் தயாரா என்று அமித்ஷா சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவாலை ஏற்கிறேன்.

அது மட்டுமல்ல. பொருளாதார சரிவு, வேலை வாய்ப்பின்மை போன்ற எல்லா பிரச்னைகளையும் விவாதிக்க வேண்டும். இந்தியாவிலேயே மதத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம்தான். இதை கொண்டு வந்ததன் மூலம் நாட்டையே இழிவுபடுத்தி விட்டது பாஜக.
இவ்வாறு அகிலேஷ் பேசினார்.

இதே போல், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், அமித்ஷாவின் சவாலை ஏற்றுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமித்ஷாவின் சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜகவினருடன் விவாதிக்கத் தயார். எந்த தளம், எந்த இடம் என்பதை தெரியப்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.


More India News