அண்ணாவை ஜெயிக்க வைத்ததே எம்.ஜி.ஆர்.தான்.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு

by எஸ். எம். கணபதி, Jan 23, 2020, 11:40 AM IST

அண்ணாவை வெற்றி பெற வைத்ததே எம்.ஜி.ஆர்.தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விருதுநகரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நேற்று(ஜன.22) நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு வாரிவாரி கொடுத்தார்கள். சிறந்த தலைவர்களாக அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த வழியில் இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஆட்சி புரிந்து வருகிறார்கள். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் ஆன்மீக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

கிராமங்களுக்கு சாலை வசதிகளை செய்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதே போல், கிராமங்களுக்கு பஸ் வசதிகளை செய்து கொடுத்தவர் ஜெயலலிதா. எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக எம்.ஜி.ஆர். வாழ்ந்து காட்டினார்.
எம்.ஜி.ஆருக்காகத்தான் மக்கள் அண்ணாவை ஜெயிக்க வைத்தார்கள். எம்.ஜி.ஆரைப் பார்த்துதான் அண்ணாவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். அதற்கு பிறகு, கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கியதும் எம்.ஜி.ஆர்.தான்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார். அமைச்சர் இப்படி பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இது அதிமுகவில் உள்ள பழைய தலைவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதாவது:

ராஜேந்திர பாலாஜி முன்பொரு முறை மோடிதான் எங்கள் டாடி என்று பேசினார். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் மோடியா, இ்ந்த லேடியா என்று கேட்டார். அப்படி மோடியை எதிர்த்துதான் அவர் கட்சி நடத்தினார். ஆனால், அந்த கட்சியில் இருந்து கொண்டு மோடியை புகழ்ந்து பேசினார். இப்போது அண்ணாவை மட்டம் தட்டி பேசுகிறார். அண்ணா பெயரால் கட்சி ஆரம்பித்து, அண்ணாவின் உண்மையான விசுவாசிகளை திமுகவில் இருந்து இழுத்துதான் எம்.ஜி.ஆர் கட்சியை நடத்தினார். இதெல்லாம் தெரியாமல் இப்போது அமைச்சர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். இதனால்தான், ஜெயலலிதா எல்லோரையும் வாயை திறக்க விடாமல் வைத்திருந்தார் என்றார்.


Leave a reply