பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் இன்று சந்தித்து பேசினார்.
ஆந்திராவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் கட்சி துவக்கி, ஒரு தேர்தலில் போட்டியிட்டார். அதன்பிறகு காங்கிரசுடன் கட்சியை இணைத்து சில காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அதன்பின், அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். அவரது தம்பி பவன்கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இவருக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் மோதல் இருந்து வருகிறது.
தற்போது ஜெகன்மோகன் அறுதிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியமைத்துள்ளார். அதனால், அவரை எதிர்ப்பதற்கு பாஜகவுடன் பவன்கல்யாண் கூட்டு சேர்ந்தார். கடந்த வாரம் பவன் கல்யாணும், ஆந்திர பாஜக பொறுப்பாளர் சுனில்தியோதரும் கூட்டாக இந்த கூட்டணியை அறிவித்தனர். 2024ம் ஆண்டு நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே கூட்டணி சேர்ந்து, ஒருங்கிணைப்பு குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பவன்கல்யாண் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி சென்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று(ஜன.23) காலையில் சந்தித்து பேசினார். அப்ேபாது ஆந்திராவில் ஜெகன்மோகனை எதிர்த்து தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை பலவீனப்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.