சேது பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு ராமாயண காலத்தில் சேது பாலம் அமைக்கப்பட்டது என்று இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. இப்போதும் கடலுக்கடியில் அந்த வழித்தடத்தில் பாலம் போன்று கற்கள் வரிசையாக இருப்பது தெரிகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சேதுசமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, சேது பாலம் இருந்ததாக கருதப்படும் பகுதியில் கடலுக்கடியில் பாறைகளை தோண்டி எடுத்து, கடலை ஆழப்படுத்துவதுதான் திட்டம். இதன்மூலம், இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் இருந்து கப்பல்கள், மேற்கு கடற்பகுதிக்கு செல்வதற்கு இலங்கையை சுற்றுவதற்கு பதிலாக இந்த சேது சமுத்திரப் பாதையில் செல்லலாம். இந்த திட்டத்தின்மூலம் தூத்துக்குடி துறைமுகம் அதிக வளர்ச்சி பெறும். தென்மாவட்டங்களில் நிறைய தொழில்கள் வளரும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், சேது பாலம் என்பது இந்தியாவின் பாரம்பரியச் சின்னம் என்று அறிவித்து, அதை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்காததால், நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது.
சுப்பிரமணிய சுவாமி இன்று(ஜன.23) சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராகி, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்பது இது வரை தெரியவில்லை. இதில் மத்திய அரசு தனது கருத்தை ஒரு பதில்மனுவாக விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், 3 மாதம் கழித்து இந்த வழக்கை எடுத்து ெகாள்வதாக கூறி தள்ளிவைத்தனர்.