இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார்.
எகனாமிஸ்ட் பத்திரிகை குழுமத்தின் துணை நிறுவனமான எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு, உலக நாடுகளில் நிலவும் ஜனநாயக நிலவரம் குறித்து ஜனநாயக குறியீடு தர வரிசை பட்டியலை வெளியிடுகிறது.
தேர்தல் ஜனநாயக நடைமுறை, அரசு நிர்வாகம், அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 41வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 10 இடங்கள் பின்னுக்கு சென்று 51வது இடத்தில் உள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக குறியீட்டு புள்ளி, 7.23 என்ற நிலையில் இருந்து 6.9 ஆக சரிந்துள்ளது. குறிப்பாக, அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்றவை ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து, தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார்.
அதில், உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.