ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் ஓ.பி.எஸ். தம்பி நியமனம் ரத்து.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

by எஸ். எம். கணபதி, Jan 23, 2020, 13:27 PM IST

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் 2 ஆக பிரிக்கப்பட்டு, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இந்த சங்கத்திற்கு இடைக்காலத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அமாவாசை என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், புதிதாக உருவாக்கப்பட்ட தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். மேலும், அதன் இடைக்காலத் தலைவராக ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதை ரத்து செய்து முறைப்படி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்த போது, இடைக்கால தலைவராக ஓ.ராஜா செயல்படுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இவ்வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஓ.ராஜா மற்றும் 17 உறுப்பினர்களும் ஆவின் கூட்டுறவு சங்க விதிகளின்படி தேர்வு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டு, அவர்களின் நியமனத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கூட்டுறவு சங்க விதிகளை முறையாக பின்பற்றி தற்காலிக மற்றும் நிரந்தர குழுவை அமைப்பது பற்றி ஆவின் நிறுவன ஆணையர் முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

You'r reading ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் ஓ.பி.எஸ். தம்பி நியமனம் ரத்து.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை