கவர்னரை திரும்ப அழைக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டசபையில் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதாலா இருக்கிறார்.
இந்நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அம்மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கட்சிகளும், எதிர்கட்சியான காங்கிரசும் இணைந்து போராட்டம் நடத்தின. மேலும், அந்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
இது மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கோபம் ஊட்டியது. மத்திய சட்டத்தை எதிர்த்து மாநில அரசு செயல்பட முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த சூழலில், கேரள சட்டசபையின் இந்தாண்டு முதல் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரையாற்ற உள்ளார். ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சி தயாரித்து வழங்கும் உரையைத்தான் கவர்னர், சட்டசபையில் வாசிப்பது மரபாக இருக்கிறது.
அதன்படி, பினராயி விஜயன் அரசு தயாரித்து அளித்த உரை, கவர்னருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துகளும் இடம் பெற்றிருக்கிறது. இதையடுத்து, இந்த பகுதிகளை சேர்த்ததற்கான விளக்கம் கேட்டு, கவர்னர் அந்த உரையை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், மத்திய பட்டியலில் உள்ள குடியுரிமை சட்டம் தொடர்பான கருத்துக்களை மாநில அரசின் உரையில் சேர்க்க முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.
இதனால், அங்கு மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான விரிசல் அதிகமாகியுள்ளது. இதற்கிடையே, சட்டசபையின் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் சபாநாயகருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இந்த சூழலில், வரும் 29ம் தேதி சட்டசபையில் கவர்னர் உரை நிகழுமா? உரையில் கவர்னர் எதிர்க்கும் பகுதிகள் நீக்கப்படுமா? கவர்னரை நீக்கக் கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்து கொள்ளப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.