நீண்ட தாடியுடன் உமர் அப்துல்லா காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இக்காட்சி தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மாநிலமும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அச்சமயம், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அவர்கள் இன்னமும் காவலில்தான் இருக்கின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் படங்களை வெளியிட்டு, போட்டிருக்கும் பதிவு வருமாறு:
உமர் அப்துல்லாவின் இந்தப் படத்தைப் பார்த்த போது மிகவும் கவலை ஏற்பட்டது. உரிய நடைமுறையோ, விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பல காஷ்மீர் தலைவர்கள் குறித்தும் இதே கவலை ஏற்படுகிறது.
காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிப்பதுடன், அங்கு மீண்டும் இயல்புநிலை திரும்பச் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.