தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடத்த தொல்லியல் துறை அனுமதி பெறாததால் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை(ஜன.28) விசாரிக்கப்பட உள்ளது.
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த முறை தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆன்மீக மாநாடும் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெறவில்லை என்றும், அனுமதி பெறாமல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், தடை விதிக்கக் கோருவதற்கான காரணங்கள் அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தனர். மேலும், தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு(ஜன.28) விசாரிப்பதாக கூறி, தள்ளி வைத்தனர்.