ஆந்திர மேலவையை கலைக்க ஜெகன் அமைச்சரவை ஒப்புதல்.. சட்டசபையில் தீர்மானம்..

by எஸ். எம். கணபதி, Jan 27, 2020, 13:47 PM IST

ஆந்திராவில் சட்டமேலவையை நிரந்தரமாக கலைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சட்டசபையில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சி, ஆட்சி புரிந்த போது, புதிய தலைநகர் அமராவதியை உருவாக்க பிரம்மாண்ட திட்டம் கொண்டு வந்து தொடங்கப்பட்டது. தற்போது அந்த திட்டத்தை ரத்து செய்யவும், 3 தலைநகர்களை உருவாக்கவும் 2 சட்டமசோதாக்களை ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு சட்டசபையில் நிறைவேற்றியது.

இதைத் தொடர்ந்து, அந்த மசோதாக்கள், சட்டமேலவைக்கு அனுப்பப்பட்டன. சட்டமேலவையில் தெலுங்குதேசம் உறுப்பினர்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளனர். அதாவது, மொத்தம் உள்ள 58ல் 4 இடங்கள் காலியாக உள்ளது. மீதியுள்ள 54 உறுப்பினர்களில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் 26 பேர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வெறும் 9 உறுப்பினர்களே உள்ளனர். பாஜக 3 உறுப்பினர்களை வைத்திருக்கிறது.

மேலும், சட்டமேலவை தலைவரான எம்.ஏ.ஷெரீப் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர். இதனால், 2 மசோதாக்களையும் ஆளும்கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. அவற்றை தேர்வுக் குழு ஆய்வுக்கு மேலவை தலைவர் அனுப்பினார். இது முடிந்து திரும்பி வருவதற்கு பல மாதங்களாகலாம்.

இதனால், முதல்வர் ஜெகன்மோகன் கடும் கோபமடைந்தார். சட்டமேலவையை நிரந்தரமாக கலைத்து விட முடிவு செய்தார். ஆந்திராவுக்கு சட்டமேலவையே தேவையில்லை என்றும் அதை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற பரிசீலிப்போம் என்றும் அறிவித்தார். நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் மட்டுமே சட்டமேலவை உள்ளது. மேலவை இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. இந்த மேலவைக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வீண் செலவு ஏற்படுகிறது என்றும் கூறினார்.
இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று(ஜன.27) நடைபெற்றது. இதில் சட்டமேலவையை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டசபையில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டசபையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு இதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான், சட்டமேலவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

தற்போது, ஆந்திர சட்டசபையில் மொத்தம் உள்ள 175 உறுப்பினர்களில் 151 பேர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். தெலுங்கு தேசம் கட்சியில் வெறும் 23 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, மேலவையை கலைக்கும் தீர்மானம் மூன்றில் 2 பங்கு வாக்குகளுடன் எளிதில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.


Leave a reply