இந்துத்துவா கொள்கை பாஜகவுக்கு மட்டும் சொந்தமா? உத்தவ் தாக்கரே பேட்டி

by எஸ். எம். கணபதி, Feb 3, 2020, 11:06 AM IST

இந்துத்துவா கொள்கைக்கு ஒட்டுமொத்தமாக உரிமை கொண்டாட பாஜக நினைப்பதும், அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று நினைப்பதும் நகைப்புக்குரியது என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருக்கும் சிவசேனாவும், மதச்சார்பின்மை பேசும் காங்கிரசும் எப்படி கூட்டணி சேரும் என்று நினைத்த பாஜகவுக்கு இது எதிர்பாராத அடியாக இருந்தது. ஆனாலும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்துத்துவா கொள்கையில் இருந்து சிவசேனா முழுவதுமாக விலகிச் சென்று விட்டதாக பாஜக பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சாம்னா பத்திரிகைக்கு உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் இன்னும் இந்துத்துவா கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. அதே சமயம், எனது பொறுப்புகளை விட்டு கொடுக்க மாட்டேன். மற்றவர்களின் மனம் நோகாத வகையில் என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்வேன்.

முதல்வராகி உள்ளதால் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக யாராவது ஒரு எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அதை செய்ய விரும்பவில்லை. அதற்கு பதிலாக மேலவை உறுப்பினராக போட்டியிடுவேன்.
நான் இந்துத்துவா கொள்கையில் இருந்து பின்வாங்கி விட்டதாக பாஜக பிரச்சாரம் செய்கிறார்கள். நான் மதமாற்றம் செய்து விட்டேனா? அவர்கள் மட்டுமே இந்துத்துவா கொள்கைக்கு முழு உரிமை கொண்டாடுவது நகைப்புக்குரியது. அதே போல், தாங்கள் சொல்வது மட்டுமே உண்மை, மற்ற யார் எது சொன்னாலும் அது பொய் என்று அவர்களாக நினைத்து கொள்வதும் நகைப்புக்குரியது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

You'r reading இந்துத்துவா கொள்கை பாஜகவுக்கு மட்டும் சொந்தமா? உத்தவ் தாக்கரே பேட்டி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை