அரசு வேலை மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளன.
சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் ஒரு தீர்ப்பு அளித்தது. அதில், அரசு வேலைகளிலும், பதவி உயர்வுகளிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்றும், அரசாங்கமே தேவைப்படும் இடங்களில் ஒதுக்கீடு செய்வது குறித்து தீர்மானிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது பற்றி நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி, காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், முஸ்லீம்லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளன.
இதே போல், மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ், அலுவல்களை ஒத்திவைத்து, இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நோட்டீஸ் ெகாடுத்துள்ளது. இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்ற தீர்ப்பு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்போருக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றும் இது பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.