இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி.. பிரசாந்த் கிஷோர் ட்வீட்.

by எஸ். எம். கணபதி, Feb 11, 2020, 18:18 PM IST

டெல்லியில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், ஆட்சியைப் பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான், பிரச்சார உத்திகளை வகுத்து கொடுத்தது. பாஜகவுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பிரசாந்த் கிஷோர் கைகோர்த்ததால், அது பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், பாஜகவும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இதனால், தனது கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் பிரசாந்த் கிஷோரை நிதிஷ்குமார் நீக்கினார்.

இந்த சூழலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே 50க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜக அதிகபட்சம் 15 முதல், 20 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டது.

அதே போல், தற்போது ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக வெறும் 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பாஜக முதல்வர்கள் என்று பெரும்படையே பிரச்சாரம் செய்தது. ஆனாலும், பாஜகவால் 10 இடங்களில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றுவதற்காக உறுதியாக நின்ற டெல்லி மக்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.


More India News