அமோக வெற்றி தந்த ஆஞ்சநேயருக்கு நன்றி.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

by எஸ். எம். கணபதி, Feb 11, 2020, 18:20 PM IST

டெல்லியில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வெற்றிக்காக ஆஞ்சநேயருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், ஆட்சியைப் பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே 50க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜக அதிகபட்சம் 15 முதல், 20 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டது.

அதே போல், தற்போது ஆம் ஆத்மி 63 தொகுதிகளிலும், பாஜக வெறும் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பாஜக முதல்வர்கள் என்று பெரும்படையே பிரச்சாரம் செய்தது. ஆனாலும், பாஜகவால் 10 இடங்களில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

இந்நிலையில், ஆம் ஆத்மி தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை அளித்த ஆஞ்சநேயருக்கு நன்றி. டெல்லி மக்களை நேசிக்கிறேன். டெல்லி மக்களை ஆஞ்சநேயர் ஆசிர்வதித்த நாள் இன்று. நாங்கள் தொடர்ந்து சரியான பாதையில் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்ற உதவுமாறு அனுமன்ஜியை வணங்குகிறோம். வெற்றியைத் தந்த மக்களுக்கும், கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.


More India News