ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி?

by எஸ். எம். கணபதி, Feb 11, 2020, 18:15 PM IST

ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக பாமக கட்சியின் சார்பில் ஒரு நிழல் நிதி அறிக்கை வெளியிடுவார்கள். சென்னையில் இன்று அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி சேரும் என்று தமிழருவிமணியன் கூறியிருக்கிறாரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு ராமதாஸ் கிண்டலாக, இந்த தம்பி, மிக, மிக முக்கியமான கேள்வி கேட்டிருக்கிறார் என்று கமன்ட் அடித்தார்.

கடந்த 2 நாளாக இந்த செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறி, மீண்டும் நிருபர்கள் அதற்கு பதில் கேட்டதற்கு, அது முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்பதால்தான், பதில் அளிக்கவில்லை என்றார்.

தமிழருவிமணியன் சொன்னது சரியா? என கேட்டதற்கு ராமதாஸ், தமிழருவிமணியன் தனக்கு தோன்றிய கருத்தை சொல்லியிருக்கிறார். அதற்கு இப்போது நாங்கள் என்ன பதில் சொல்ல? என்றார்.

உடனே நிருபர்கள், கடந்த காலங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் கூட்டணி சேருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு ராமதாஸ், அவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு அதற்கு பிறகு பதில் சொல்கிறேன் என்றார்.

நீங்கள் கூட்டணியை மறுக்காததால், மவுனம் சம்மதம் என்று எடுத்து கொள்ளலாமா? என்று கேட்டதற்கு அவர், அது உங்கள் கருத்து என்றார். இப்படியாக கடைசி வரை ரஜினி கட்சியுடன் கூட்டணி சேருவது பற்றி ராமதாஸ் மழுப்பலாக பதிலளித்தார்.


More Tamilnadu News