3 மாநில பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்..

by எஸ். எம். கணபதி, Feb 15, 2020, 20:07 PM IST

கேரளா உள்பட 3 மாநிலங்களில் பாஜக தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவுக்கு அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் தலைவரானாலும் மோடி-அமித்ஷா ஆகியோரே கட்சியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.

இந்நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தல் காரணமாக பாஜகவின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் நியமனத்தை தள்ளிப் போட்டிருந்தனர். தற்போது டெல்லி தேர்தல் முடிந்த சூழலில், 3 மாநிலகளுக்கு பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிவிப்பில், கேரளாவில் மாநில பாஜக தலைவராக கே.சுரேந்திரன், சிக்கிமில் மாநில பாஜக தலைவராக டால்பகதூர் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் ராகேஷ்சிங் நீக்கப்பட்டு, புதிய தலைவராக விஷ்ணுதத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த ஆண்டு செப்டம்பரில் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு தமிழக பாஜக தலைவராக யாருமே நியமிக்கப்டடாமல் 5 மாதங்களாக பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், முருகானந்தம் என்று பலரது பெயர் அடிபட்டது. கடைசியாக, ரஜினிகாந்துக்காக அந்த பதவி காலியாக வைக்கப்பட்டிருப்பதாகவும் பேசப்பட்டது.

தற்போது மற்ற மாநில பாஜகவுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருவதால் தமிழகத்திற்கும் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply