டிரம்ப்பை வரவேற்க நூறு கோடியா? அடிமை மனப்பான்மை.. பாஜக மீது சிவசேனா காட்டம்

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 10:52 AM IST

குஜராத்தில் டிரம்ப் வருகைக்காக செய்யும் ஏற்பாடுகள், இந்தியர்களின் அடிமை மனப்பான்மையை எதிரொலிப்பதாக உள்ளது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசனோ, என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக எதிர்க்கட்சியாக மாறி விட்ட நிலையில், சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே அம்மாநிலத்தில் கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் நூறு கோடி செலவிட்டு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. டிரம்ப் செல்லும் பாதையில் அவர் கண்ணில் படாதாவது, குடிசைப்பகுதிகளை மறைத்து நீளச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இது இந்தியர்களின் அடிமைத்தனத்தை எதிரொலிப்பதாக உள்ளது. முன்பு இங்கிலாந்து மன்னர் அல்லது ராணி, இந்தியா போன்ற தங்களின் அடிமை நாட்டுக்கு செல்லும் போது இப்படித்தான் ஏராளமாக பணம் செலவிட்டு ஏற்பாடு செய்வார்கள். அதே போல்தான், இப்போது பாஜக அரசு செய்கிறது.

குடிசைப்பகுதிகளை மறைப்பது எதற்காக? இது போன்ற சுவர்களை நாடு முழுவதும் கட்டுவதற்கு அமெரிக்கா நிதியுதவி தரப் போகிறதா? டிரம்ப் வந்து விட்டு போவதால், பணமதிப்பு வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்படப் போகிறதா? அல்லது அந்த குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயரப் போகிறதா?

டிரம்ப் வந்து விட்டு போகும் 3 மணி நேரத்திற்காக குஜராத்தில் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயம் செய்யப்படுவது ஏன்? இதனால், நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. அமெரிக்காவில் குஜராத்திகள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். அதிபர் தேர்தலில் அவர்களின் ஓட்டுகளை டிரம்ப் பெறுவதற்காக, எப்படி இருக்கிறீர்கள் டிரம்ப்? என்று கேட்பது போன்று இப்படி மோடி ஏற்பாடு செய்திருக்கிறார். டிரம்ப் வருகையே மோடிக்கும், அவருக்குமான அரசியல் உடன்பாடுதான். வேறொன்றுமில்லை.
இவ்வாறு மோடி அரசை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

You'r reading டிரம்ப்பை வரவேற்க நூறு கோடியா? அடிமை மனப்பான்மை.. பாஜக மீது சிவசேனா காட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை