டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் பொறுப்பேற்பு..

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 15:24 PM IST

டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார்.

டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறையை போன்றே ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார். ராம் லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் ஆசிரியர்கள், டாக்டர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கெஜ்ரிவாலுக்கு பகல் 12.15 மணிக்கு கவர்னர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கஹ்லோட், இம்ரான் உசேன், கோபால் ராய், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதே போல், மற்ற அமைச்சர்களும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பொறுப்பேற்றனர்.

அரசு பள்ளிகளில் தேசபக்தி கல்வி, வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள் போன்ற திட்டங்களை ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அந்த திட்டங்களுக்கு கெஜ்ரிவால் அரசு முன்னுரிமை அளிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

You'r reading டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் பொறுப்பேற்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை